அத்தியாயம் 3
காவல்நிலையத்திற்கு வக்கீலோடு வந்து சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டரோடு கோபமாக சண்டையிடத் தொடங்கினார்.
“சார் சார் முதல்ல கோபப்படாம நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேளுங்க, நான் உங்களை அவமானப் படுத்தறதுக்காகவோ, இல்ல இந்த கல்யாணத்தை நிறுத்தறதுக்காகவோ உங்க அம்மாவை கைது செஞ்சுட்டு வரல. உங்க அம்மா என்ன வேலை பண்ணி இருக்காங்க தெரியுமா? இதோ நீங்களே இந்த வீடியோவை பாருங்க.”
அந்த வீடியோவில் தனது சகாக்கள் புடை சூழ ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த ரங்கநாயகி, தனக்கு எதிரே நின்று கொண்டிருந்த அவ்வூரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அவரது மனைவிக்கு புத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஏன்டா பெருமாளு, அதுதான் உன் பிள்ளைக்கு பதினாறு வயசாச்சே இதுக்கு அப்புறம் எதுக்கு அவளை மேல படிக்க வைக்க வெளியூருக்கு அனுப்பறே? ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டிக் கொடுத்து கடமையை முடிக்காம, பொட்ட புள்ளயை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு இருக்க, உனக்கு கூறுவாரு இருக்கா இல்லையா?
“இல்ல ஆத்தா எம்புள்ள தான் பள்ளிக்கூடத்திலேயே முதல் மாணவியா வந்திருக்கா, அதோட எம்புள்ள மேல படிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுது அதுதான்…, அது ஆசைப்பட்டபடி படிப்பையாவது கொடுப்போமுன்னு தான்…”
“ஓஹோ… ஆசைப்பட்டு என்ன கேட்டாலும் செஞ்சு கொடுத்திடுவியோ? அவள வெளியூருக்கு படிக்க அனுப்பறேல்ல, அங்க வேற எவனோ ஒரு ஜாதிக்கார பையன காதலிச்சிட்டு வந்து நின்னான்னா என்ன பண்ணுவ? அப்பவம் அவ ஆசைபட்டான்னு அவனுக்கே உன் பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பியோ?
ஊருக்குள்ள ஒருத்தன் உன்னை சேர்த்துக்க மாட்டான், அதுக்குத் தான் சொல்றேன் இப்பவே உனக்கு பிடிச்ச நல்ல மாப்பிள்ளையா பார்த்து ஏற்பாடு பண்ணு, இல்லாட்டி நானே பக்கத்து ஊர்ல இருக்கிற நம்ம சாதி சனத்துகிட்ட விசாரிச்சு, ஒரு நல்ல பையனா பார்க்கறேன். உடனே கல்யாணத்தை முடிஞ்சிடு இதெல்லாம் தள்ளி போடக் கூடாது.
இப்ப என் பேத்தியையே எடுத்துக்கோ, அவளையும் தான் என் மகன் காலேஜில சேர்க்கறேன்னு சொன்னான், ஆனா நான் அதை இதை சொல்லி அவன் மனசை மாத்தி, இப்ப என் பேரனோட அவளுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கப் போறேன்.
நம்ம பிள்ளைங்க நம்ம கண்காணிப்பில் இருக்கற வரைக்கும் தான், நம்ம பேச்சைக் கேட்கும். வெளிய மட்டும் போச்சு…அப்பறம் ஊர்ல இருக்கறவங்க எல்லாம் நம்மள பத்தி பேசற மாதிரி ஆகிடும். புரிஞ்சுதா இல்லையா? “
ஒருவாராக தலை குனிந்தபடியே அவர்கள் தலையாட்டிவிட்டு செல்வதோடு வீடியோ முடிந்திருந்தது.
“பார்த்தீங்களா சார் இந்த வீடியோ தான் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு, உங்க அம்மா பேசுற பேச்சை கேட்டு சோசியல் மீடியால எல்லாரும் கழுவி ஊத்துறாங்க. அதோட சாதி பிரச்சனையை தூண்டி விடற மாதிரியும், குழந்தை திருமணத்தை ஆதரிக்கிற மாதிரியும், உங்க அம்மா பேசியதால உடனே கைது பண்ணனுமுன்னு மேல் இடத்துல இருந்து எனக்கு அவ்வளவு பிரஷர் வந்திருக்கு.
அதோட இதுல அந்த பெருமாளோட பொண்ணு சூசைட்டுக்கு அட்டென்ட் பண்ணி இருக்கு. அதுக்கு உங்க அம்மா தான் காரணம்னு சொல்லி அவங்க மேல பொதுமக்கள் கேஸ் போட்டிருக்காங்க, இப்ப சொல்லுங்க நான் உங்க அம்மாவை கைது பண்ணது தப்பா?”
கிருஷ்ணமூர்த்தி திரும்பி தனது தாயை முறைக்க அவர் மயக்கம் வருவது போன்று பாவனைக் காட்டி, அருகில் நின்றிருந்த தனது பேரனின் தோளில் கண்மூடி சாய்ந்து கொண்டார்.
“கிருஷ்ண மூர்த்தி சார் இது மட்டும் இல்ல, இப்ப நீங்க உங்க பொண்ணுக்கு பண்ண போறது கூட பெரிய தப்பு தான். அதை உங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணும்னு நினைச்சு உங்களை பார்க்க வந்தேன், உங்கம்மா என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா?”
“அய்யய்யோ இருக்கறது பத்தாதுன்னு இந்த வாத்தி வேற எக்ஸ்ட்ரா என் மகன் கிட்ட போட்டுக் கொடுக்கிறானே, இருக்க இருக்க அவன் பார்வை வேற கொலைவெறியா மாறிட்டு வருது, என்ன செய்ய காத்திருக்கானோ? ஒருவேளை என்னை இங்கயே ஸ்டேஷன்ல விட்டு போட்டு போயிடுவானோ?”
ரங்கநாயகி தனக்குள் புலம்பி கொண்டிருக்க சுப்பிரமணியம் வாத்தியார் மீண்டும் தொடர்ந்தார்.
“உங்க பொண்ணு கல்யாணத்தை நான் நிறுத்தினா ஊர்ல இருக்குற புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு வர விட மாட்டேன்னு மிரட்டறாங்க, உங்களுக்காக தான் நான் அமைதியா திரும்ப வந்துட்டேன்.
படிப்பு மேல அவ்வளவு மதிப்பு வச்சிருக்க நீங்களா உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்துவீங்க? அந்த பொண்ணுக்கு குடும்பம் நடத்துற பக்குவம் வர வேண்டாமா சார்? அதுவரைக்கும் இந்த கல்யாணத்தை தள்ளி போடுங்க.”
ஏற்கனவே இன்ஸ்பெக்டர் காட்டிய வீடியோவினால் வேதனையோடு நின்ற கிருஷ்ணமூர்த்திக்கு, சுப்பிரமணியம் வாத்தியாரின் பேச்சும் மனமாற்றத்தை கொடுத்திருந்தது.
அதனால் இத்தோடு இந்த திருமண ஏற்பாட்டை நிறுத்தி விடுவதாக அவருக்கு வாக்களித்தவர், ஒரு வழியாக கேஸ் கொடுத்தவர்களையும் சமாதானப்படுத்தி அதை வாபஸ் வாங்க வைத்திருந்தார்.
திருமணம் நின்று விட்டதால் உறவுகள் அனைத்தும் அப்போதே இடத்தை காலி செய்திருக்க, வெறிச்சோடி கிடந்த வீட்டிற்குள் கோபத்துடன் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி,
“ஏம்மா வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? நம்ம வீட்டு பிள்ளைக்கு கல்யாணம் பண்றோம்னா அது அவ ஜாதகத்த பார்த்து ஜோசியர் சொன்னதால செய்ய நினைச்சோம், இதுல எனக்கு விருப்பமே இல்ல தான், படிக்கிற பிள்ளைக்கு இந்த வயசுல கல்யாணம் பண்ணறோமேன்னு நானே மனவேதனையோட தான் இதுக்கு சம்மதிச்சேன்.
ஆனா நீங்க, என்னமோ பொண்ணுங்க படிக்கிறதே தப்புங்கற மாதிரி இப்படி பேசி வச்சிருக்கீங்க? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல…”
என்று ஆரம்பித்து சரமாரியாக தனது கோபத்தை வார்த்தை மழைகளாய் கொட்டித் தீர்த்தவர், அங்கிருந்து வேகமாக தனது அறைக்குச் சென்று விட்டார்.
இவ்வளவு நேரமும் பேரனின் தோளில் சாய்ந்து கொண்டு மயங்கியது போல் நடித்துக் கொண்டிருந்தவர், தன் மகன் உள்ளே சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, பெருமூச்சு விட்டபடியே அக்கடா என்று சோபாவில் சாய்ந்தார்.
அப்போது திடீரென கோல்டன் ஸ்பேரோ பாடல் இசைக்க, கூலிங் க்ளாஸை தனது கண்களில் மாட்டியபடி அவர் முன்பு ஆடிக் கொண்டு வந்து நின்றாள் கண்மணி.




